போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.1,012 கோடி நிதி ஒதுக்குவதற்கான துணை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
போக்குவரத்து கழகங்கள், கட்டாய கல்விச்சட்டம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.1,012 கோடி நிதி இந்த துணை நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்படுகிறது.
மாநில போக்குவரத்துக் கழ கங்களின் பணியாளர்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவை தொகைகளை வழங்க, முன்பணமாக ரூ.208 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனி யார் பள்ளிகளில் படிக்கும் குழந்தை களுக்கான கல்விக் கட்டணத்தை திரும்ப அளிக்க ரூ.97 கோடி முன்பணம் அளிக்கப்படுகிறது. சென்னை மாநகரின் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த 310 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.116.03 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெளிவட்டச் சாலை பகுதி-1 திட்டத்தில் பேருந்து நிறுத்த வழித்தடம், சாலையோர வசதிகள், சந்திப்புகளை மேம்படுத்த நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ.113 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தை புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த ரூ.89.84 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார், திருவள்ளூர் செவ்வாப் பேட்டை ஆதிதிராவிட மேல் நிலைப் பள்ளி வளாகங்களில் ரூ.111 கோடியில் புதிய பாலிடெக் னிக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவ மனையின் முடநீக்கியல், சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர் பாதையியல் துறைகளுக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நபார்டு வங்கி கடனுதவியுடன் 579 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி அனுமதிக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும், கடந்த 1998-99 முதல், 2004-05-ம் ஆண்டுகள் வரை அந்தந்த ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிதிக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட செலவுகளுக் கான மானிய கோரிக்கைகளையும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்மூலம் ரூ.5,810 கோடி மிகைச் செலவுகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.