கரோனா விஷயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அலட்சியமாக செயல்படுவதாக முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’நாளிதழிடம் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோதே 200-க்கும் மேற்பட்டோர் முட்டிமோதி அவருக்கு சால்வை அணிவித்தனர். சத்தியமூர்த்தி பவனின் ஏ.சி. அரங்கில் நடந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் அவருடன் பங்கேற்றனர். தன் உதவியாளர், ஓட்டுநருக்கு கரோனா இருப்பதாகதினேஷ் குண்டுராவ் அப்போதே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கூறியுள்ளார்.
இதை பொருட்படுத்தாமல் ஏராளமான தலைவர்கள், நிர்வாகிகளையும் தினேஷ் குண்டுராவை சந்திக்க வைத்துள்ளார் அழகிரி. அவரை அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க வைத்துள்ளார்.
தினேஷ் குண்டுராவுக்கு நெருக்கமானவர்களுக்கு கரோனா இருப்பது தெரிந்தும் அழகிரி ஏன் இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டார்? கூட்டணி கட்சித்தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள்,தொண்டர்களின் உயிரை பொருட்படுத்தாமல் பல கூட்டங்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அவரது அலட்சியத்தாலேயே கடந்த மே 21-ம் தேதி ராஜீவ்காந்தி நினைவு நாளன்று நடத்தியகூட்டத்தில் பங்கேற்ற வசந்தகுமார்எம்.பி., பொன்.கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கை நாராயணன், மோகன்காந்தி உள்ளிட்ட 10 பேருக்குதொற்று ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாததாலேயே காங்கிரஸாருக்கு தொற்று ஏற்படுகிறது. இந்த அலட்சியத்தால் வசந்தகுமார் போன்றவர்களை இழந்துள்ளோம்.
கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பிறகும், தனிமைப்படுத்திக்கொள்ளாமல், மக்களின் உயிருடன் விளையாடும் கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுத்து, நோய் தொற்று தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.