சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் உள்ள 165 மாணவர்களுக்கு உணவு தயாரிக்க ஒரே ஒரு சமையல்காரர் மட்டுமே உள்ளதால், அந்த விடுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் எம்.சி.ராஜா விடுதியின் இணைப்பாக ஆதி திராவிடர் நலக் கல்லூரி மாணவர் விடுதி கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்குகிறது. இங்கு வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து கல்லூரிகளில் படிக்கும் ஏழை தலித் மாணவர்கள் தங்கியுள்ளனர்.
விடுதி திறக்கப்பட்டு 10 மாதங்களாக அங்குள்ள மாணவர்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு தயாரிக்க ஒரு சமையல்காரர் மட்டுமே உள்ளார். இதனால், மாணவர்களுக்கு தரமான, போதிய உணவு, நேரத்துக்கு கிடைப்பதில்லை. பல நேரங்களில் மாணவர்கள் உணவில்லாமல் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது.
அந்த விடுதியில் தங்கும் கல்லூரி மாணவர் கூறுகையில், “ஒருவர் மட்டுமே அனைத்து மாணவர்களும் கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன் சமைப்பது கடினம். எனவே நல்ல உணவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் எங்கள் வார்டனும் எங்களுக்காக சமைக்க நேரிடும். சமையல்காரருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அவருக்கு மாற்றாக ஒரு நாள் பணி புரியக் கூட யாரும் இல்லை” என்றார்.
15 அறைகள் கொண்ட இந்த விடுதியில், 165 மாணவர்கள் தங்கி வருகின்றனர். முன்பு, தொடக்கப் பள்ளியாக இருந்த இந்த கட்டிடத்தில், ஒரே அறை யில் 15 மாணவர்கள் தங்க வேண்டியுள்ளதால், பெரும்பாலா னவர்கள் தரையில்தான் படுக்கின் றனர். ஒவ்வொரு அறையிலும் 2 மின் விளக்குகளும், 2 மின்விசிறி களும் மட்டுமே உள்ளன. சமையல்காரர் தவிர, இந்த விடுதியின் பராமரிப்புக்காக ஒரு வார்டன், ஒரு மெய்க்காப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வசிக்கும் மற்றொரு மாணவர் கூறுகையில், “விடுதி வளாகத்தை சுத்தம் செய்ய மாணவர்களே காசு கொடுத்து ஒருவரை நியமித்துள்ளோம். அவர் வரவில்லையென்றால், நாங்களே சுத்தம் செய்து கொள்கிறோம்” என்றார்.
இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவா கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த விடுதி பூட்டிக் கிடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் குரல் கொடுத்த பிறகு, இது திறக்கப்பட்டது. 10 மாதங்களாக ஒரு கூடுதல் சமையல்காரர் நியமிக்காதது தலித் மாணவர்களின் நலன் மீது, அதிகாரிகள் கொண்டுள்ள மெத்தனப் போக்கையே காட்டுகிறது. அந்த விடுதியில் உள்ள மாணவர் ஒருவருக்கு ரூ.750 வீதம், ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபாய் இந்த விடுதிக்காக செலவிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அதிகாரி கூறுகையில், “கூடுதல் சமையல்காரர் நியமிக்க வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் கேட்டுள்ளோம். சென்னையில் உள்ள ஆதி திராவிடர் விடுதிகளுக்காக, தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு, ஜூன் மாதத்தில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்” என்றார்.