தமிழகம்

நரபலி வழக்கு தொடர்பாக பிஆர்பி நிறுவன ஊழியர்களிடம் 7 மணி நேரம் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

நரபலி வழக்கில் நேற்று ஆஜரான பிஆர்பி நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள் தங்கள் உறவினர்களுடையது என 4 பேர் எஸ்.பி.யிடம் முறையிட்டுள்ளனர்.

கிரானைட் குவாரிக்காக 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டதாக கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடி யோன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. மதுரையை அடுத்த இ.மலம்பட்டி மயானத்தில் கடந்த 13-ம் தேதி 4 சடலங்களின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கீழவளவு காவல் நிலையம் வந்த எஸ்.பி.யிடம் இ.மலம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா, அழகர்சாமி, முருகன், மலைச்சாமி ஆகியோர் மனு அளித்தனர். அதில், தங்களது உறவினர்கள் சின்னக்காளை, சின்னம்மாள், வீரன், செல்வி என்ப வரின் 3 மாத குழந்தை ஆகியோர் இறந்துவிட்டனர். போலீஸார் தோண்டி எடுத்துச்சென்ற எலும்பு கள் இவர்கள் 4 பேருடையதுதான் எனத் தெரிவித்தனர். இறந்தவர் களின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அளிக்கும்படி எஸ்.பி. உத்தரவிட் டார். இத்தகவல் குறித்து விசாரிக்க மேலூர் டிஎஸ்பி மங்களேஸ்வர னுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், போலீஸார் அனுப்பிய சம்மன் தொடர்பாக பிஆர்பி நிறுவன ஊழியர்கள் அய்யப்பன், ஜோதிபாசு ஆகியோர் கீழவளவு காவல் நிலையத்தில் நேற்று காலை ஆஜராகினர். கூடுதல் எஸ்பி மாரியப்பன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் 7 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டனர். பி.ஆர்.பழனிச் சாமி, ஊழியர் பரமசிவம் ஆகியோர் ஆஜராகவில்லை.

இதுகுறித்து பிஆர்பி நிறுவன வழக்கறிஞர் மனோகரன் கூறிய தாவது: பணி நிமிர்த்தமாக பி.ஆர்.பழனிச்சாமி நேற்று ஆஜராக முடியவில்லை. இன்று அவரும், பரமசிவமும் ஆஜராவார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.

இதற்கிடையே, நரபலி வழக்கை விசாரித்த தனிப்படை ஆய்வாளர் நாகராஜ் திடீரென மாற்றப்பட்டு, டிஎஸ்பி மங்களேஸ்வரனின் நேரடி பார்வையில் 3 தனிப்படைகளை புதிதாக அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT