கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் சமயபுரம் கடைவீதி. 
தமிழகம்

திருச்சி அருகே கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சியில் குறிப்பிட்ட கடைகள் மட்டும் அடைப்பு: வியாபாரிகள் அதிருப்தி

ஜெ.ஞானசேகர்

கரோனா பரவல் காரணமாகத் திருச்சி அருகே கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்ட ச.கண்ணனூர் பேரூராட்சிப் பகுதியில் இன்று முதல் குறிப்பிட்ட கடைகளை மட்டும் அடைக்க உத்தரவிட்டுள்ளதால், சமயபுரம் கடைவீதி அனைத்துக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருச்சியில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் ச.கண்ணனூர் பேரூராட்சி கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர், போலீஸார், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், செப்.28-ம் தேதி முதல் அக்.5-ம் தேதி வரை ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெட்டிக் கடை, டீக்கடை உள்ளிட்ட கடைகள், ஹோட்டல், வணிக வளாகம், திருமண மண்டபம் லாட்ஜ் ஆகியவற்றைத் திறக்க தடை விதிக்கப்பட்டது.

இதன்படி, ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் கோயில் வருகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இன்று குறிப்பிட்ட கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.

பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட வியாபாரிகள்.

அதேவேளையில், சமயபுரம் கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பூக்கடை, பூஜைப் பொருட்கள் கடை மற்றும் டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டிருந்தன. அங்கெல்லாம் வழக்கம்போல் மக்கள் கூட்டமும் காணப்பட்டது.

இதனால், சமயபுரம் கடைவீதி அனைத்துக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். கரோனா பரவலைத் தடுக்க குறிப்பிட்ட கடைகளை மட்டும் அடைத்தால் போதுமா என்று அவர்கள் கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து, ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 100-க்கும் அதிகமான வியாபாரிகள் திரண்டு, பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், “ஆட்சியர் அறிவுறுத்தலின்படி கடைவீதி வணிக வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளோம். ஆனால், கோயில் திறக்கப்பட்டு வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் வருகையும், பேருந்துப் போக்குவரத்தும் வழக்கம்போல் உள்ளது. டாஸ்மாக் கடையும் செயல்படுகிறது. எனவே, எங்கள் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் அளித்த உறுதியை ஏற்று வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT