பேரவையில் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸுக்கு விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கங்களை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 7-ம் தேதி மீண்டும் கூடிய உரிமைக்குழு, ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளர், உரிமைக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்தது உரிமை மீறலா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க உயர் நீதிமன்றம், உரிமைக்குழுவுக்கு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், நோட்டீஸுக்கு தடை விதித்தது தவறானது, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரணைக்கு ஏற்றிருக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிமைக்குழு நோட்டீஸில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைக்குழு சட்டப்பேரவையின் ஒரு அங்கம் என்பதால், உரிமைக்குழு நடைமுறைகளுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உள்ளது எனவும், சட்டப்பேரவைக்குள் நடைபெறும் உரிமைக்குழு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது, நோட்டீஸ் மீது எந்த முடிவும், கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நீதிமன்றம் தலையிட எந்த அவசியமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.