முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண் பர் பொட்டு சுரேஷ் கொலையில், மும்பையில் தலைமறைவாக இருந்துவந்த அட்டாக் பாண் டியை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்தனர். இந்நிலை யில் அட்டாக் பாண்டியை போலீ ஸார் என்கவுன்ட்டரில் கொலை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வும், இதனால் அவரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிடக் கோரியும் அட்டாக் பாண்டியின் மனைவி தயாளு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டியை பொட்டு சுரேஷ் கொலையில் போலீஸார் சேர்த்துள்ளனர். பொட்டு சுரேஷ் கொலையில் அட்டாக் பாண்டி சார்ந்துள்ள கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் பெற முயற்சிக்கின்றனர் எனக் கூறப் பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் துரைப்பாண்டியன் வாதிடும்போது, அட்டாக் பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டு, நவிமும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
அவரை மதுரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்த மும்பை நீதி மன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள் ளது. அட்டாக் பாண்டியை போலீ ஸார் துன்புறுத்தவில்லை. போலீஸாரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளார் என்றார்.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அட்டாக் பாண்டியின் மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
வெற்றுத் தாளில் கையெழுத்து
அட்டாக் பாண்டி ஆயுதப்படை மைதானத்தில் விசாரிக்கப்படும் தகவல் அறிந்து அவரது மனைவி தயாளு, குழந்தை சங்கமித்ராவுடன் வந்திருந்தார். அட்டாக் பாண்டியை சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்களிடம் மனைவி தயாளு கூறும்போது, ‘என் கணவர் தலைமறைவாக இருந்த காலத்தில் போலீஸார் என்னிடம் கடுமையாக நடந்துகொண்டனர்.
2011-ம் ஆண்டிலேயே எனது கணவர் மும்பை சென்றுவிட்டார். 2013-ல் நடந்த கொலையில், அவரது பெயரை போலீஸார் சேர்த்துள்ளனர். என்னிடமும், தற்போது கணவரிடமும் 30-க்கும் மேற்பட்ட வெற்றுத் தாள்களில் மிரட்டி போலீஸார் கையெழுத்து பெற்றுள்ளனர்’ என்றார்.