காரைக்கால் அரசு பொது மருத்துவமனையைச் சீரமைக்கக் கோரி காரைக்கால் போராளிகள் குழுவினர் இன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள கான்கிரீட் தூண் ஒன்றின் மேற்பகுதியிலிருந்து நேற்று திடீரென பெரிய அளவிலான சிமெண்ட் காரை பெயர்ந்து நோயாளி படுக்கையின் மீது விழுந்தததில், கரோனா நோய்த் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த காரைக்காலைச் சேர்ந்த 42 வயது ஆணுக்குத் தலையில் அடிபட்டுக் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் மற்றும் மருத்துவமனையின் அவல நிலைக்குக் கண்டனம் தெரிவித்தும், மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தியும் காரைக்கால் போராளிகள் குழுவினர் இன்று மருத்துவமனை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, காரைக்கால் ஞானப்பிரகாச வீதியில் இன்று கூடிய போராளிகள் குழுவினர், அங்கிருந்து அரசு மருத்துவமனையை முற்றுகையிடப் புறப்பட்டு வந்தனர்.
இடையில் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குப் புதிய கட்டிடம் கட்ட வேண்டும், உள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், போதுமான மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும், போதுமான நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.
போராளிகள் குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.