மாவேலி விரைவு ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்கக் கோரி குமரி மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
''கன்னியாகுமரி- மங்களூருவுக்கு இடையே தினசரி இயக்கப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்களூரு- திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் மாவேலி விரைவு ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களை நாகர்கோவிலில் இருந்து அதிக அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வாராந்திர ரயில்களான நாகர்கோவில்- தாம்பரம் மற்றும் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் ரயிலைத் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்- சென்னை இடையே ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயிலை இயக்கலாம். இந்த ரயில் தென் மாவட்ட மக்களுக்கு சென்னைக்கான வார இறுதிப் பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருநெல்வேலி- நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி- நாகர்கோவில்- நேமம் இடையே இயக்கப்படும் ரயில்கள் தற்போது திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்டு செயல்படுகின்றன. இதனை மதுரைக் கோட்டத்துக்கு மாற்றித் தர வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை ஒரு புதிய கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிந்துள்ளன. இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும்''.
இவ்வாறு குமரி மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தெரிவித்துள்ளார்.