தமிழகம்

மனைவி இந்தியா வர அனுமதி கோரி ராபர்ட் பயஸ் மனு: அக்டோபர் 2-வது வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி ராபர்ட் பயஸ், தன்னைச் சந்திப்பதற்கு மனைவி இந்தியா வருவதற்கு அனுமதிக்கும்படி தாக்கல் செய்த மனு மீது வாதங்களை முன்வைக்க வெளியுறவுத் துறை அவகாசம் கேட்டதால் விசாரணையை அக்டோபர் 2-வது வாரத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், தன்னைச் சந்திக்க இந்தியா வருவதற்கு இலங்கையில் உள்ள தன் மனைவி பிரேமாவிற்கு விசா வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சகத்தின் சார்பு செயலாளர் சி.கண்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பிரேமா மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என ராபர்ட் பயஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், குற்ற வழக்குகளைக் காரணம் காட்டித்தான் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபரில் விசா கேட்டு விண்ணப்பித்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ பிரிவு காவல்துறை செய்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பிரேமாவின் பெயர் உள்துறை அமைச்சகத்தின் தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், தடைப் பட்டியலில் பிரேமாவின் பெயர் ஏன் சேர்க்கப்பட்டது என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது க்யூ பிரிவு காவல் துறையிடம் நீதிமன்றம் விளக்கம் பெறலாம் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாதங்களை முன்வைக்க வெளியுறவுத் துறை அவகாசம் கேட்டதால் அதை ஏற்று விசாரணையை அக்டோபர் 2-வது வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

SCROLL FOR NEXT