அதிமுக - பாஜக கூட்டணி என்பதுதிருமண பந்தம்போல நிலையானதாக இருக்கிறது என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சிகலில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஈரோடு மாவட்டத்தில் பாஜக 2 தொகுதிகளில் போட்டியிடும். அதில், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது உறுதி. தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதற்கும், பாஜகவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. சில விஷக் கிருமிகள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதை அரசியல் ஆக்கக்கூடாது. பெரியார் சிலையை அவமதித்தவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அதிமுக - பாஜக கூட்டணி என்பது திருமண பந்தம்போல நிலையானதாக இருக்கிறது. பாஜகவில் ஒரே வேட்பாளர் நரேந்திர மோடி தான். நாங்கள் நரேந்திர மோடியை வைத்து தான் ஓட்டு கேட்க போகிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தேசிய பொறுப்புகளில் நியமிக்கப்படவில்லை என்பதை புறக்கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பேரவைத் தேர்தலில் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாமல் இருக்கலாம் என்றார்.