ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான நேற்று சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கற்பகம் தடுப்பணை நீரோடையில் குடும்பத்தினருடன் குளித்து மகிழும் பொதுமக்கள். படம்: எஸ்.குரு பிரசாத் 
தமிழகம்

சேலம் சேர்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள நீரோடைகளில் குடும்பத்தினருடன் குளித்து மகிழும் மக்கள்

எஸ்.விஜயகுமார்

கரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளதால், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சேலம் சேர்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

சேலம் மாநகராட்சியாக வளர்ச்சியடைந்த போதும் இங்கு பொழுதுபோக்கு அம்சங்களாக தியேட்டர்கள் மற்றும் பூங்காக்கள் மட்டுமே உள்ளன. தற்போது, கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சேலத்தில் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்த அண்ணா பூங்கா புதுப்பிக்கும் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது. மேலும், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது.

வீடுகளில் முடக்கம்

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் நிலையுள்ளது. மேலும், குழந்தைகள் எந்த நேரமும் செல்போன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தங்கள் நேரத்தை செலவிடும் நிலையுள்ளது. தற்போது, ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஒருவாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் கரோனா பரவல் காரணமாக வெளியில் சென்று சுதந்திரமாக விளையாட முடியாத நிலையுள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஞாயிறு விடுமுறையின்போது சேலம் பொதுமக்கள் பலர், இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவற்றில் ஏற்காடு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும் இங்கு வெளி மாவட்டத்தினர் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.

நீரோடைகளுக்கு பயணம்

இந்நிலையில், சேலத்தை ஒட்டியுள்ள சேர்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள நீரோடை மற்றும் தடுப்பணைகளில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அறிந்த சேலம் மக்கள் பலர் தற்போது நீரோடைகள், தடுப்பணைகள் ஆகியவற்றைத் தேடிச் சென்று குடும்பத்தினர், நண்பர்களுடன் குளித்து மகிழ்கின்றனர்.

ஞாயிறு விடுமுறை நாளான நேற்று சேலம் கன்னங்குறிச்சி சேர்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கற்பகம் தடுப்பணை நீரோடையில் பலர் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக குளித்து பொழுதை கழித்து மகிழ்ந்தனர்.

மகிழ்ச்சி தரும் குளியல்

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் எந்நேரமும் வீட்டிலேயே இருக்கின்றனர். இதேபோல, கரோனா ஊரடங்கு காரணமாக பெரியவர்களும் கடந்த 6 மாதமாக சுற்றுலா செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கிறோம். இந்நிலையில், சேலத்தில் உள்ள சுற்றுலா இடங்களுக்குக் கூட செல்ல முடியாமல் தடை உள்ளது.

எனவே, வீட்டில் இருந்து உணவு, தின்பண்டங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, குழந்தைகளுடன் இதுபோன்ற நீர்நிலைகளுக்கு வந்து உற்சாகமாக குளித்து, உணவை சாப்பிட்டுச் செல்கிறோம். இது எங்களுக்குபுத்துணர்வு அளிக்கிறது. இதனால், குழந்தைகளும் மகிழ்ச்சியடைகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT