சென்னை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து பழைய மகாபலிபுரம் வரை நடைபெற்ற பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு.படங்கள்: ஆர்.ரகு 
தமிழகம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி சென்னையில் பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு

செய்திப்பிரிவு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னையில் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அகில இந்திய பாரம்பரிய கார்கள் கூட்டமைப்பு சார்பில் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் நேற்று நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள்..

இந்நிகழ்ச்சியில்ஆங்கிலேயர் கால கார்கள் உள்ளிட்ட பாரம்பரிய கார்கள் அணிவகுத்துச் சென்றன. இந்த கார்களின் அணிவகுப்பை ஆயிரக்கணக்கான பொதுமக்களும், கார் ரசிகர்களும் பார்த்து ரசித்தனர்.

இதுதொடர்பாக அகில இந்திய பாரம்பரிய கார்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரஞ்சித் பிரதாப் கூறியதாவது:

கடந்த மாதம் சென்னை தினம் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (நேற்று) உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இரு நாட்களையும் சிறப்பிக்கும் வகையில் சென்னை நகரில் பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தப் பாரம்பரிய கார்கள் அணிவகுப்பு சென்னை கடற்கரையையொட்டிய மெரினா கலங்கரை விளக்கம் பகுதியில் தொடங்கி பழைய மகாபலிபுரம் சாலை வரை நடைபெற்றது. இதில் பாரம்பரிய கார்களை வைத்திருக்கும் 10-க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் பங்கேற்று, தங்கள் கார்களை இயக்கினர்.

இதுபோன்ற பாரம்பரிய கார்கள் அணிவகுப்பை பிரபலப்படுத்த இந்திய பாரம்பரிய வாகனங்கள் மன்றத்தை டெல்லியை தலைமையிடமாகவும் சென்னை,மும்பை, கொல்கத்தா ஆகியஇடங்களில் மண்டல அலுவலகங்களை கொண்டதாகவும் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT