ராமநாதபுரம் சூரியசக்தி மின் திட்டத்துக்கு சட்டவிரோதமாக நிலங்களை கையகப்படுத்தி வருவதாகவும், இதனால் அதானி குழுமம் தொடர்புடைய அனைத்து நிலப் பதிவுகளை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.தேவரிஷி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
ராமநாதபுரத்தில் ரூ.4,536 கோடி யில் சூரியமின்சக்தி பூங்கா அமைக்க, டான்ஜெட்கோ நிறுவனத் துடன் 18.7.2015-ல் குஜராத்தை சேர்ந்த அதானி குழுமம் ஒப்பந்தம் செய்தது. இங்கு 5 யூனிட்டுகள் மூலம் 648 மெஹாவாட் மின்சா ரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மின்சாரத்தை ஒரு யூனிட் டுக்கு ரூ.7.01 பைசா கொடுத்து தமிழக மின்வாரியம் வாங்க உள் ளது.
இந்த மின் திட்டத்துக்காக கமுதி பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் தனியார் நிலம், பஞ்சமி நிலம், அரசு புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்துக்காக அரசு புறம்போக்கு நிலம் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆனால், கமுதியில் செங்கப் படை, புதுக்கோட்டை, எம்.கரிசல் குளம், முதல்நாடு ஆகிய ஊர்களில் 300 ஏக்கர் நிலம் அதானி குழுமத் தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு அதானி குழுமம் எவ்வளவு பணம் வழங்கியது என்பது தெரியவில்லை. இந்த நிலப்பரிமாற்றங்கள் அனைத்தும் இரவு 9 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது. நிலத்தின் உரிமையாளர்களுக்கு தெரியாம லேயே அதானி குழுமத்துக்கு நிலங்கள் வழங்கப்படுகின்றன.
நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் 5 கிராமங்களில் பலர் மாயமாகியுள்ளனர். உயிருடன் இருப்பவர்களை இறந்ததாகக் காண்பித்து பல்வேறு சொத்து பதிவுகள் நடைபெறுகின்றன. பஞ்சமி நிலங்களும் வழங்கப்படு கின்றன. சமூகவிரோத கும்பலுடன் இணைந்து இப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மாவட்ட நிர்வா கம், பதிவுத் துறை, போலீஸார் ஆகியோர் அதானி குழுமத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
எனவே, சூரிய மின்சக்தி திட்டத் துக்காக அதானி குழுமத்துக்கு நிலம் பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 2015 முதல் நடைபெற்ற அதானி குழுமம் தொடர்புடைய அனைத்து நிலப் பதிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.