பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அரசு விரைவு போக்குவரத்து கழகம் கூடுதலாக 200 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், செப். 7-ம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளின் சேவை தொடங்கியது. கரோனா அச்சம் காரணமாக ஆரம்பத்தில் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால், பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டன. தற்போதுபயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேவைக்கு ஏற்றார்போல், பல்வேறு வழித்தடங்களில் கூடுதலாக200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 600-க்கும் மேற்பட்ட சொகுசு, விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில் பயணிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், விரைவுப் பேருந்துகளில் கூட்ட நெரிசல் இருப்பதாக பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 200 சொகுசு பேருந்துகளை இயக்கவுள்ளோம்’’ என்றனர்.