காரைக்காலில் தற்காலிக மீன் மார்க்கெட் கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் மீனவப் பெண்கள் 7 பேர் லேசான காயமடைந்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் பயன்பாடின்றி இருந்து வந்தது. இந்நிலையில், காரைக்காலில் நேரு மார்க்கெட் தற்போது இயங்கி வரும் இடத்தில் நெருக்கடி உள்ளதால், பொதுமக்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அங்கிருந்த மீன் மார்க்கெட் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், சவுக்கு கம்புகளால் தற்காலிக முறையில் அமைக்கப்பட்டிருந்த மீன் மார்க்கெட் கூடாரத்தின் ஒரு பகுதி இன்று (செப். 27) மதியம் சரிந்து விழுந்தது. இதில், அங்கு மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீனவப் பெண்கள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 2 பேருக்குத் தலையில் லேசாக அடிபட்டது. தகவலறிந்து வந்த காரைக்கால் நகரக் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது பேருந்து, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.