ஆம்பூர் அருகே செல்போனில் விளையாடியபடி வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்துசென்ற இளம்பெண் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் அபிகிரிப்பட்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (27). இவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி லக்சனா (21). இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன.
சென்னையில் கணவருடன் வசித்து வந்தார் லக்சனா. கரோனா தொற்று வேகமாகப் பரவி வந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் இ-பாஸ் பெற்று ஆம்பூர் வந்தார். ஆம்பூர் தாலுக்கா, மிட்டாளம் அடுத்த குட்டகிந்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.
திருமூர்த்தி அவ்வப்போது வந்து மனைவியைப் பார்த்துவிட்டுச் சென்றார். வீட்டில் தனியாக இருந்த லக்சனா, தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் அடிக்கடி மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. தினந்தோறும் நள்ளிரவு 1 மணி வரை ஆன்லைனில் அவர் 'கேம்' விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது குடும்பத்தார் கண்டித்தும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு (செப். 26) 9.30 மணியளவில் தனது பாட்டி வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலம் அருகே வெளிச்சம் இல்லாத பகுதியில் நடந்தபடியே ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார் லக்சனா. அப்போது அங்குள்ள விவசாயக் கிணற்றில் அவர் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அவரது பாட்டி மற்றும் குடும்பத்தார் ஓடிவந்து பார்த்தபோது லக்சனா கிணற்றில் விழுந்தது தெரியவந்தது. உடனே, உமராபாத் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்தனர். அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் கிணற்றில் இறங்கிய தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் கழித்து இறந்த நிலையில் கிடந்த லக்சனாவின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர் லக்சனா தவறி கிணற்றில் விழுந்தாரா? அல்லது தற்கொலை நோக்கத்துடன் கிணற்றில் குதித்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்சனாவுக்குத் திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக உமராபாத் காவல் துறையினர் தெரிவித்தனர்.