தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை உயர்வை மக்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (செப். 27) ஒருபோக சாகுபடி பாசன நிலங்களுக்குத் தண்ணீர் திறந்துவிட்ட பிறகு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
விவசாயப் பணிகள் முழுமையாக நடைபெற்று வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் வழங்கப்படுகின்றன. உரம் இருப்பு இல்லாத இடங்களில் உரங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்தத் தாமதம் விரைவில் சரி செய்யப்படும்.
விவசாயிகளுக்குக் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.500 கோடி அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.