பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர்.
இந்தத் தகவல் பரவியதையடுத்து, சமத்துவபுர குடியிருப்புவாசிகள் மற்றும் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழித்தடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டுவர் என்று காவல் துறையினர் சமாதானம் செய்து, மறியலைக் கைவிடச் செய்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவர் தந்தை பெரியாரின் சிலையைத் திருச்சியில் மர்ம நபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது தமிழக அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.