இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை பலரும் உணராததால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் பாரம்பரிய மலை மாடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
மலை மாடுகள் எனப்படும் அசல் நாட்டு மாடுகள் தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ள கூடலூர், நாராயணத்தேவன்பட்டி, போடி, ராயப்பன்பட்டி, கேகே.பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளன. இவற்றின் சாணம் வீரியம் மிக்கவை. இதனால் இயற்கை விவசாயத்தில் இம்மாடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் வண்டி இழுத்தல், ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு இம்மாடுகள் அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.
நமது பாரம்பரிய அடையாளம் என்பதால் இவற்றைப் பராமரிப்பதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். கிராமப்புறங் களைப் பொறுத்தவரை, இந்த மாடுகளை வளர்ப்பதை கவுரவமாகவே கருதுகின்றனர்.
மலையடிவாரப் பகுதியில் இவை இருப்பதால் தீவனத் தேவைக்கு மலை களையே அதிகம் சார்ந்திருக்கும். மலைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மேய்ச்சலுக்கு அவர்களின் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இப்பழக்கம் இருந்துள்ளது.
மலைப்பகுதியில் மாடுகளை பட்டியில் அடைத்து மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு பட்டி பாஸ் என்றும், ஒரே நாளில் கீழிறங்கி வந்து விடுவதற்கு மேய்ச்சல் பாஸ் என்றும் தனித்தனியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலப்போக்கில் வனத் துறைச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. மேய்ச்சலுக்காக வரும் மாடுகள், உடன் வரும் மனிதர்கள் ஆகியோரால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மேய்ச்சல் அனுமதிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாகவே கூடலூர், கம்பம் பகுதிகளில் மேய்ச்சல் அனுமதி வழங்க வனத் துறை கடுமையான கெடுபிடிகளை கடைப்பிடித்து வருகிறது. மேய்ச்சல் அனுமதியை பல மாதங்களாகப் புதுப்பிக்காததால் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. மீறிச் செல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இயற்கை விவசாயத் தில் பலரும் ஆர்வம் காட்டாததால் இதன் சாணத்தின் தேவை குறைந்தது. வர்த்தக ரீதியாக அதிக லாபம் தரும் ஜெர்சி உள்ளிட்ட உயர் ரக மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுபோன்ற நிலையால் மலை மாடுகளின் எண் ணிக்கை குறைந்துவிட்டது.
தற்போது கரோனா ஊரடங்கால் விவசாயம் பாதிக்கப்பட்டு இந்த மாடுகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கர்னல் ஜான்பென்னிகுயிக் பாரம்பரிய மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத் தலைவர் சி.கென்னடி கூறிய தாவது:
இயற்கை விவசாயத்தின் ஆணி வேராக இந்த மாடுகள் இருக்கின்றன. 1.25 லட்மாக இருந்த இதன் எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாகக் குறைந்து விட்டது. பாரம்பரிய மாடுகளைக் காப்பாற்றுவது நமது கடமை. இதை உணர்ந்து மேய்ச்சல் அனுமதியில் உள்ள கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் என்றார்.
விவசாயி ஏ.சுரேஷ்குமார் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் மாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 2,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கலப்பின மாடுகளைவிட இதன் பால் சத்து நிறைந்தது. பாரம்பரிய மாடுகளைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.