சிலம்பம் பயிற்சி அளிக்கும் வீரசுகுணா 
தமிழகம்

வாக்கப்பட்ட ஊரிலும் வீரத்தை விதைக்கும் "வீரசுகுணா"

இ.மணிகண்டன்

ஆட்டமும் ஓட்டமும் திருமணம் வரைதான் என்பதைத் தவிடு பொடியாக்கும் வகையில் திருமணமாகிச் சென்ற ஊரிலும் மாணவ, மாணவிகளுக்கும், திருமணமான பெண்களுக்கும் சிலம்பம் கற்றுக் கொடுத்து வீரத்தை விதைத்து வருகிறார் வீரசுகுணா.

விருதுநகர் ஆர்.ஆர். நகர் அருகே உள்ள முண்டலாபுரம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பெண்மணி வீரசுகுணா. பெயருக்கு ஏற்றவாறே வீரம் மிகுந்தவராய் காணப்படும் இவர், தான் கற்றுக்கொண்ட சிலம்பாட்டக் கலையை கிராமத்து மாணவ, மாணவிகளுக்கும், திருமணமான பெண்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறார். வீரசுகுணாவிடம் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று கிராமத்துக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.

இது குறித்து வீரசுகுணா கூறியதாவது:

விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி எனது சொந்த ஊர். பிளஸ் 2 படித்துவிட்டு தற்போது மருந்தியல் பட்டப்படிப்பு படித்து வருகிறேன். கடந்த ஆண்டு எனக்குத் திருமணம் நடைபெற்றது. கணவர் வசந்தகுமார் சென்னையில் பணிபுரிகிறார். பள்ளியில் படித்தபோது சிலம்பம் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். சுமார் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்.

திருமணம் ஆன பிறகும் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை, மாலை நேரங்களில் எங்கள் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் 6 பேருக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கத் தொடங்னேன். எனது பெற்றோரைப் போலவே கணவரும், அவரது குடும்பத்தினரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். இதனால் 6 பேர் இப்போது 31 பேராக உயர்ந்துள்ளனர்.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, திருமணமான பெண்களும் சிலம்பம் பயிற்சி பெறுகின்றனர். "நெடுங்கம்படி" என்ற முறையில் சிலம்பம் கற்றுக் கொடுக்கிறேன். அண்மையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு மற்றும் மன உறுதியை வளர்ப்பதற்காகவும், தற்காப்புக்காகவும் சிலம்பத்தை பலர் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள்.

தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பானப் பயிற்சி அளித்து முண்டலாபுரம் என்ற எங்கள் ஊரின் பெயரை தமிழக அளவிலும், அதைத் தொடர்ந்து தேசிய அளவிலும் தெரியச் செய்வேன் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் வீரசுகுணா.

SCROLL FOR NEXT