சிவகங்கை அருகே இலுப்பக் குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் தாமதமாக இடம் ஒதுக்கப்பட்டதால், நடப்பாண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே இலுப்பக்குடி, மதுரை அருகே இடையப்பட்டி ஆகிய இடங்களில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையமும், காரைக்குடி அருகே அமராவதி புதூரில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் வீரர்களின் குழந்தைகள் சிவகங்கை, காரைக்குடி, மதுரை நரிமேடு, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயின்று வருகின்றனர். அவர்களது குழந்தை கள் பள்ளிக்குச் சென்று வருவதில் சிரமம் இருந்தது. இதையடுத்து இலுப்பக்குடி, இடையபட்டி இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2019-ம் ஆண்டில் அனுமதி வழங்கியது. மேலும் பள்ளி தொடங்க 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கேந்திரிய வித்யாலயா சங்கதன் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டும் எனத் தெரிவித்தது.
இடையபட்டி பயிற்சி மையத் திலேயே இடம் ஒதுக்கப்பட்டதால் நடப்பாண்டிலேயே பள்ளி செயல்பட தொடங்கியது. ஆனால், சிவகங்கை இலுப்பக்குடி பயிற்சி மைய வளாகத்தில் பள்ளிக்குத் தேவையான 10 ஏக்கர் நிலம் வெடிபொருட்கள் கிடங்கு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அருகே இருந்ததால் பள்ளிக்கு நிலம் ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து பயிற்சி மையம் அருகிலேயே 10 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிலும் இழுபறி நீடித்ததால், மீண்டும் இந்தோ திபெத் எல்லை பாதுாப்பு படை பயிற்சி மையத்திலேயே 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, கடந்த வாரம் தான் கேந்திரியா வித்யாலயா சங்கதன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. தாமதமாக இடம் ஒதுக்கப்பட்டதால் இந்த ஆண்டு பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற் பட்டது. இதனால் அடுத்த ஆண்டு பள்ளியைத் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.