அறந்தாங்கி அருகே தண்ணீரின்றி கருகிய நிலையில் காணப்படும் நெற்பயிர்கள். 
தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்கள்: கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க கல்லணைக் கால்வாயில் கூடு தலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கரில் காவிரி நீரைக் கொண்டு நெல் சாகுபடி செய் யப்பட்டு வருகிறது. நிகழாண்டு அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவு டையார்கோவில் வட்டாரங்களில் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்துக்கும் முன்னரே நேரடி நெல் விதைப்பு மூலம் விதைப்பு பணி முடிந்துவிட்டது.

தற்போது, போதுமான அளவுக்கு இப்பகுதியில் மழை பெய்யாததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மேலும், கண்மாய்களிலும் 20 சதவீதம் அளவுக்குக் கூட தண்ணீர் இல்லை. நாகுடி பிரிவு பகுதிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வரவேண்டிய நிலையில், தற்போது 100 கனஅடி மட்டுமே வருகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப் பகுதிக்கு வரக்கூடிய கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு காவிரி படுகைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவிரி கடைமடைப் பகுதி விவசாயிகள் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மற்ற பகுதியில் மழை பெய்தாலும்கூட கடைமடைப் பகுதியில் குறிப்பிடும் அளவுக்கு மழை இல்லை. மேலும், கண்மாய்களில் 50 சத வீதம் அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தால்தான் பாசனத்துக்கு திறக்க முடியும். ஆனால், தற்போது 20 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளதால் பாசனத்துக்கு தண்ணீரை திறக்க முடியவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகின்றன.

தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ள நிலையிலும்கூட புதுக்கோட்டை மாவட்ட கடைமடைக்கு வரக்கூடிய கல்லணைக் கால்வாயில் குறைந்த அளவிலேயே தண்ணீரை திறப்பது வேதனை அளிக்கிறது.

எனவே, முறை வைக்காமல் முழு கொள்ளளவில் தண்ணீரை திறக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்பகுதியில் நிகழாண்டு நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப் படும் என்றனர்.

SCROLL FOR NEXT