ஊத்தங்கரை அருகே மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனபள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பல இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஊத்தங்கரையை அடுத்த சின்னதள்ளப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் தோட்டம் அமைத்துள்ளனர். மஞ்சள் தோட்டத்திற்கு நேரடி மற்றும் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் பயிரில் வருவாய் குறைவாக கிடைப்பதால், தற்போது மஞ்சள் தோட்டத்தில் ஊடுபயிராக சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவான பகுதியாக ஊத்தங்கரை உள்ளது. நிகழாண்டில் பருவமழை ஓரளவிற்கு பெய்துள்ளதால், நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மஞ்சள் தோட்டத்தினுள், சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளோம். 10 மாத பயிரான மஞ்ச ளுடன், 2 மாத பயிரான சின்ன வெங்காயத்தையும் சாகுபடி செய்கிறோம். மஞ்சளுக்கு இறைக்கும் தண்ணீர், உரங்கள் மற்றும் பூச்சி மருந்து உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் சின்ன வெங்காயத்துக்கும் கிடைப்பதால், ஒரே செலவில் 2 பயிர்களையும் பராமரிக்க முடிகிறது. இதனால் உற்பத்தி செலவு குறைகிறது. தற்போது அறுவடை செய்யப்படும் சின்னவெங்காயத்தை கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் மட்டும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். இதனால் ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் பயிர் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சியும், ஆலோசனையும் வழங்க வேண்டும் என்றனர்.