தமிழகம்

கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம்

ஆர்.டி.சிவசங்கர்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முதலில் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறைதான். கடந்த மார்ச் மாதம் பொது ஊரடங்குதொடங்கியது முதல் கடுமையாக பாதிக்கப்பட்டவை சுற்றுலாத் தலங்கள்தான். குறிப்பாக,சுற்றுலாவை நம்பியுள்ள நீலகிரி மாவட்டம்பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்கு உள்ளானது.தற்போது, ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு, பூங்காக்கள் திறக்க அனுமதி கிடைத்தபோதும், வருகைக் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகளின்றிபூங்காக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளையே நம்பியுள்ளவியாபாரிகள், கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்தாண்டுகரோனா தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக குறைந்து விட்டது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் வராததால், அவர்களையே நம்பியிருந்த எங்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டது. நீலகிரி மாவட்டம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டுமெனில், அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கபடவேண்டும். பயணிகள் வந்தால்தான் எங்கள் வாழ்வாதாரம் மீட்கப்படும்’’ என்றனர்.

இந்நிலையில், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு மாசு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மாசு பிரச்சினை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருவதை தவிர்க்கக் கூடும் என இந்திய பயண மற்றும் சுற்றுலாக் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்திய சுற்றுலா இயக்குநர்களின் தேசிய அமைப்பு தலைவர் பிரணாப் சர்க்கார் ‘‘இந்திய பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மிகவும் முக்கியமாகும். ஆனால், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மாசு பிரச்சினை சுற்றுலாத் துறையைப் பாதிக்கும். பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மறுசுழற்சி நடவடிக்கைகளால் மாசைக் குறைக்க முடியும்" என்றார்.

இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவச் செயலர்சுபாஷ் கோயல் கூறும்போது, ‘‘பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் இருக்கும் இடங்களையே சுற்றுலாப் பயணிகளால் அதிகம்விரும்புவார்கள்.

எனவே, அரசு மட்டுமின்றி, தனி நபர்கள், சமூக, தன்னார்வ அமைப்புகள் மற்றும் குடியுரிமை நலச் சங்கங்கள் இணைந்து குப்பை குறைப்பு, கழிவு சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்’’ என்றார். சுற்றுலாவையே நம்பியுள்ள மலை மாவட்டத்தின் பொருளாதாரத்தைகருத்தில்கொண்டு, சுற்றுலாத் துறைக்குபுத்துயிரூட்ட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SCROLL FOR NEXT