தமிழகம்

ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார்: மும்பை நிறுவனம் மீது தமிழக சிபிசிஐடி வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்தின் மீதான ரூ.28 ஆயிரம் கோடி மோசடி புகார் குறித்து தமிழக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘பிராங்க்ளின் டெம்பிள்டன் மேனேஜ்மென்ட் இந்தியா’ என்ற நிறுவனம் பல்வேறு நிதி திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளது. கோடிகளில் முதலீடு செய்யும் நபர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துஉள்ளனர்.

இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. தமிழகத்தில் 14 இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 6 நிதி திட்டங்களில் நஷ்டம் அடைந்ததாக கணக்குக் காட்டி, திடீரென அந்த திட்டங்களை நிறுத்தியுள்ளது. இந்த 6 நிதித் திட்டங்களில் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் முதலீட்டாளர்கள் அந்தந்த மாநிலத்தில் இந்த நிறுவனம் மீது புகார் அளித்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த நிறுவனம் மீது முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் இணைந்து, ‘சென்னை பைனான்ஷியல் மார்க்கெட் அண்ட் அக்கவுண்டபிலிடி’ என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக சிபிசிஐடியின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்துள்ளனர். இதன்படி பிராங்க்ளின் டெம்பிள்டன் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT