சென்னை மாநகராட்சி மற்றும் கரோனா தொற்று அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வழியிலான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 
தமிழகம்

வைரஸ் பரவலுக்கான காரணத்தைக் கண்டறிந்து கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவலுக்கானகாரணங்களை கண்டறிந்து, குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சென்னைமாநகராட்சி மற்றும் தொற்று அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கே.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகும் கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், நாமக்கல், தருமபுரி,திருவாரூர் ஆகிய 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம், காணொலி மூலம் நேற்று ஆய்வு நடத்தினார்.

அப்போது, மாவட்டங்களில் கரோனா தொற்றை அதிகளவில் பரிசோதனை நடத்தி கட்டுப்படுத்துவது, இறப்பு விகிதத்தை குறைப்பது, சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சில தினங்களாக மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதால் அதை குறைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். வைரஸ் பரவலுக்கான காரணங்களை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கு, முறையாக திட்டமிட வேண்டும். தமிழக அரசின்நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டியுள்ள நிலையில் கரோனா பரவலைதடுக்க மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டல பகுதிகளுக்கான சிறப்புஅலுவலர்களிடம் அவர் பேசும்போது ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி, தொற்றை கண்டறிய வேண்டும். தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, தொற்று எதனால் ஏற்படுகிறது. எப்படி மற்றவர்களுக்கு தொற்றுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

ஆய்வுக்கூட்டங்களில் டிஜிபி ஜே.கே.திரிபாதி, வருவாய்த்துறை செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத் துறை செயலர்ஹர்மந்தர்சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT