மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வேலூர் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவரின் கன்னத்தில் அறைந்ததோடு, கழுத்தைப் பிடித்து தள்ளி பெண் காவல் ஆய்வாளர் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூரை அடுத்த நாட்றம்பள்ளியைச் சேர்ந்தவர் சேகர்(36). கடந்த 2001-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். 2 மகன்கள் உள்ளனர். கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் சேகரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அவர் தனியாக வசித்துவந்தார்.
இதுகுறித்து சேகர் கூறும் போது, ‘‘எனக்கும் எனது மனைவிக் கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால், மனைவி மகன்களோடு தாய்வீடு சென்று விட்டார். கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் என்னை பெற்றோரும் சேர்க்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் உள்ளவர்கள் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் என் கை எலும்பு முறிந்தது. எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு தொல்லை கொடுக்கும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் புகார் தெரிவிக்க வந்தேன். நான் மனு எதுவும் கொண்டு வராததால் அரங்கின் உள்ளே அனுப்ப போலீஸார் மறுத்தனர்.
ஏற்கெனவே, 6 முறை மனு கொடுத்துவிட்டேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் நான் ஏன் இங்கு வரப் போகிறேன். நான் ஆட்சியரைப் பார்த்து கேள்வி கேட்கப் போகிறேன் என்றேன். அப்போது அங்கு வந்த வேலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்வி, ‘எத்தனை முறைதான் மனு கொடுக்க வருவாய்’ எனக் கூறி என்னை வெளியேற்ற முயன்றார். அதனையும் மீறி அரங்கினுள் செல்ல முயன்றேன். இதனால் ஆய்வாளர் செல்வி, என் கன்னத்தில் அறைந்தார். பின்னர், அந்த இடத்தில் இருந்து வலுக்கட்டாயமாக என்னை அப்புறப்படுத்தினார். எனது பிரச்சினையை தீரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றார்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் புகார் மனுவுடன் வராத காரணத்தால் புகார் தெரிவிக்க வந்தவரை பெண் காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம், ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.