நாளை(வியாழக்கிழமை) பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா ( தமிழக முதல்வர்) : ''இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன் வந்த இறைத் தூதர் இப்ராஹிமின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருணாநிதி (திமுக தலைவர்) : ''‘இஸ்லாம்’ என்பது ஒரு சமயம் அல்லது மதம் என்று கூறுவதைவிட, அது ஒரு ‘வாழ்க்கை நெறி’ என்றே கூறலாம் எனப் பேரறிஞர் அண்ணா அடிக்கடி கூறுவார். திமுக தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் எக்காலத்திலும், எந்நாளிலும் இஸ்லாமிய மக்களின்பால் பரிவு கொண்டுள்ள இயக்கமாகும்.பக்ரீத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய உடன்பிறப்புகளின் குடும்பத்தார் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகி இன்பம் நிலவிட எனது இதயம்கனிந்த நல்வாழ்த்துகள்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
விஜயகாந்த் (தேமுதிக தலைவர்) : ''ஏழை, பணக்காரன், இருப்பவர், இல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எவ்வித பாகுபாடும் இல்லாமல் தியாகத்தையும், ஈகையையும் போற்றுகின்ற வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவரும் பகிர்ந்துண்டு வாழுகின்ற, சமதர்ம நெறியை போற்றும் வகையில் குர்பானி வழங்கி கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): '' ‘குர்பான்’ என்றால் அரபியில் ‘நெருக்கத்தை ஏற்படுத்துதல்’ ஆகும். ‘குர்பானி’ என்ற உருது சொல் ‘தியாகப் பிராணி’ என்று பொருள் தரும். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக, இறைவனுக்காக தியாகத்தைச் செய்வதன் மூலம் அவனது நெருக்கத்தைப் பெற்றிட முடியும் என்று வலியுறுத்தும் இத்தியாகத் திருநாளில் தியாகத்தால் பிறந்து, தியாகத்தால் வளர்ந்து, தியாகத்தால் இயங்கி வருபவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த தியாகப் பெருநாள் வாழ்த்துகள்'' என்று வைகோ கூறியுள்ளார்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்) : ''தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் ( தமிழக காங்கிரஸ் தலைவர்): ''இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த தியாக பெருநாள் வாழ்த்துக்கள்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.