வால்பாறை அருகே உள்ள கல்லாறு காடர் பழங்குடிகள் தம் மூதாதையர் வாழ்ந்த நிலத்தை மீட்க 13 மாத காலம் நடத்திய இடைவிடாத போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளனர்.
இவர்கள் வசிக்கும் அடர்ந்த கானகப் பிரதேசத்தில் ஓடும் இடைமலையாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தொடர் மண்ணரிப்பு ஏற்பட்டு பழங்குடி மக்களின் வாழ்வாதாரமான 50 ஏக்கர் நிலங்கள் பள்ளத்தாக்குகளுக்குள் சென்றுவிட்டன. அதன் உச்சமாக 2019 ஆகஸ்ட் மாதம் பெய்த மழையில் மேலும் 10 ஏக்கர் நிலம் சரிந்து 4 வீடுகள் அடியோடு நாசமாகின. இங்கு நிலவும் அபாயம் கருதி தம் குடிசைகளைக் காலி செய்த பழங்குடிகள், இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெப்பக்குளமேடு செட்டில்மென்ட் பூமியில் வந்து குடிசைகளைப் போட்டனர்.
புலிகள் காப்பகம் திட்டத்தின் மூலம் இவர்களை வெளியேற்றத் தீவிரமாக முயன்றுவந்த வனத்துறையினர், தெப்பக்குளமேட்டில் குடிசை போட்டவர்களை மிரட்டினர். மீறி உருவான குடிசைகளைப் பிரித்து எறிந்தனர். இதனால் வீடிழந்த பழங்குடியினர் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர். மிகவும் பழுதான 4 வீடுகளில் 23 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருக்க, தெப்பக்குள மேட்டில் உள்ள நிலங்களை வழங்கக்கோரி வட்டாட்சியர், சப்-கலெக்டர் முதற்கொண்டு மாவட்ட கலெக்டர் வரை மனு செய்தனர்.
ஒரு வருடமாகியும் இதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில்தான் கடந்த சுதந்திர தினத்தன்று இம்மக்கள் பொதுநல அமைப்பினர் துணையுடன் சம்பந்தப்பட்ட கல்லாறு மலைக் கிராமத்து தெப்பக்குளமேட்டில் குழந்தைகளுடன் டெண்ட் அடித்துக் குடியேறினர். இதனால் இப்பகுதி பதற்றத்திற்கு உள்ளானது.
‘எங்கள் மண்ணை நாங்களே மீட்டுக்கொள்கிறோம்!- சுதந்திர தினத்தில் வனத்திற்குள் குடியேறிய காடர் பழங்குடிகள்’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 15- அன்று இந்து தமிழ் இணையதளத்தில் வால்பாறை கல்லாறு காடர் பழங்குடிகளின் நில மீட்புப் போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளது. கல்லாறு காடர் பழங்குடி மக்களின் கோரிக்கைக்கு இணங்க தெப்பக்குளமேடு பகுதியிலேயே நிலம் அளிக்க அரசு அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் இன்று (செப்.26) காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை 23 குடும்பங்களுக்கு நில அளவை செய்துள்ளனர்.
இப்பணியில் வருவாய்த் துறை, வனத்துறை, மற்றும் நில அளவைத் துறையினர் அடங்கிய 15 பேர் குழு ஈடுபட்டது. பழங்குடியினர் தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர்கள் தர்மன், ஐயப்பன், மற்றும் வால்பாறை கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதிகாரிகளுக்கு கல்லாறு காடர் பழங்குடியினர் ஒத்துழைப்பு அளித்ததோடு, தங்களது பாரம்பரிய உணவுகளை அவர்களுக்கு அளித்து மகிழ்ந்தார்கள்.
புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கிராமங்களுக்கு மாற்று இடம் வழங்க முடியாது என்று வனத்துறையினர் கூறிவந்த நிலையில், கல்லாறு மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 -பாரம்பரிய கிராம சபையின் தீர்மானத்தின்படி மாற்று இடத்திற்கான நில அளவை செய்த தமிழக அரசின் இப்பணியானது தமக்கு மிகப்பெரும் நம்பிக்கை அளிப்பதாக மூத்த பழங்குடிகள் தெரிவித்தனர்.