செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் அமைச்சர் கே.சி.வீரமணி. 
தமிழகம்

சசிகலாவை எதிர்த்துதான் ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது: அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

வ.செந்தில்குமார்

சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்று வருகிறது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் நகரும் நியாயவிலைக் கடைகள் திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இன்று (செப். 26) தொடங்கி வைத்ததுடன் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:

"தமிழகத்தில் நடமாடும் நியாயவிலைக் கடைகளை முதல்வர் பழனிசாமி கடந்த 21-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. குக்கிராமங்களில் வசிக்கும் பொதுக்கள் இந்தத் திட்டத்தால் பெரிய பலன் பெறுவார்கள். அவர்கள் எளிதில் ரேஷன் பொருட்கள் பெற முடியும்.

அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து பத்திரிகைகள்தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேவை இல்லாதவர்கள், மக்களால் வெறுக்கப்படக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் இன்றைக்கு இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

அதேபோல், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த சர்ச்சையும் இல்லை. சுமுகமாக இருக்கிறது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பத்திரப் பதிவு அதிகரித்து வருகிறது".

இவ்வாறு அமைச்சர் வீரமணி தெரிவித்தார்.

அப்போது, வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் வேலழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT