ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரை தகுதி நீக்கம் செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மற்றும் தேவாளை ஒன்றிய அதிமுக செயலராக இருப்பவர் எஸ். கிருஷ்ணகுமார்.
இவரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் முருகேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கிருஷ்ணகுமார் 2018-ல் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். கூட்டுறவு சங்க தலைவர்களாக இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி சார்ந்த தொழிலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என்பது விதியாகும். இந்த விதியை மீறி நிதி நிறுவனத்தை கிருஷ்ணகுமார் நடத்தி வருகிறார். எனவே அவரை தலைவர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, கிருஷ்ணகுமாரை தலைவர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய செப். 3-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகர் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. பின்னர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டுறவு கடன் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருந்தால் தகுதியிழப்பு செய்யலாம். ஆனால் மனுதாரர் மனைவி தான் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவி பெயரில் தான் உரிமம் உள்ளது. மேலும் அந்த நிதி நிறுவனம் மனுதாரர் தலைவராக உள்ள தொடக்க கூட்டுறவு வங்கியின் எல்லைக்குள் செயல்படவில்லை. எனவே தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.