முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான மன்மோகன் சிங்கின் 88-வது பிறந்த தினம் இன்று (செப்.26). ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசில் 2004-2014 வரை இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதனையொட்டி, திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தொலைபேசி மூலமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்புகொண்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி:
"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும், எதிர்காலத் திட்டங்களும் உலக அளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தக் காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.