கோப்புப்படம் 
தமிழகம்

சாயர்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது: முக்கிய பிரமுகரை கொலை செய்யத் திட்டம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் வீச்சரிவாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர்.

சாயர்புரம் பகுதிக்கு நேற்றுமுன்தினம் மாலையில் ஆட்டோவில் வீச்சரிவாள், அரிவாள் போன்றஆயுதங்களுடன் வந்த 6 பேர் அங்குள்ள கடைகளில் மாமூல் கேட்டு தகராறு செய்ததுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்ததும் சாயர்புரம் காவல்நிலைய எஸ்ஐகள் முருகப்பெருமாள், அருள் சாம்ராஜ் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று,அவர்களை பிடிக்க முற்பட்ட போது, போலீஸாரை அவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர்.

இருப்பினும் போலீஸார் துணிச்சலுடன் போராடி அவர்களை கைதுசெய்து, வீச்சரிவாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி தச்சநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (32), சேரன்மகாதேவி, மேலக்கூனியூர் அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த மணிமகன் தங்கச்செல்வன்(26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னத்தம்பி (23), திருநெல்வேலி தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு நியூ காலனியைச் சேர்ந்த மகாராஜன் (31), பாளையங்கோட்டை, கீழநத்தம் வெள்ளக்கோவில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தகணேசன் மகன் சண்முகராஜன் (23), திருநெல்வேலி மேலப்புத்தனேரி காந்திநகரைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி (19) என தெரியவந்தது.

இவர்கள் மீது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், சாயர்புரம் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தியதில், முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சாயர்புரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்சாயர்புரம் காவல் நிலையத்துக்கு சென்று, ரவுடிகளை கைது செய்தடிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை பாராட்டினார்.

SCROLL FOR NEXT