கந்து வட்டி வழக்கில் மதுரை சலூன் கடைகாரருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். கரோனா நிவாரண உதவிக்காக இவரை `மனதின் குரல்' (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். இதையடுத்து மோகன் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீஸார் கந்துவட்டி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் அவரைத் தேடியதால் மோகன் தலைமறைவானார். அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், கரோனா காலத்தில் மக்களுக்கு உதவியதால் பல்வேறு அமைப்புகள் என்னைப் பாராட்டின. இதைக் கெடுக்கும் வகையில் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்து மோகனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.