அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்கானசட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. வழக்கமாக ஒரு பல்கலைக்கழகம் பிரிக்கப்படும்போது, மூலப் பல்கலைக்கழகத்துக்கு அதன் பெயரை அப்படியே வைத்துவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு புதிய பெயர் சூட்டுவதுதான் வழக்கமாகும்.
ஆனால், இங்கு பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட இணைப்புப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்து விட்டு, இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்புக்கு அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படவிருப்பது முன்னாள், இந்நாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அழகப்பா செட்டியார்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல்பள்ளி ஆகிய 4 வளாகங்களை உள்ளடக்கிய கல்வி நிறுவனம்தான்இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது.1978-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் என்பது இந்த 4 வளாகங்களில் உள்ள கல்வி நிறுவனங்களைத்தான் குறிக்கும்.
தற்போதுள்ள பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படாவிட்டால், அந்த பல்கலைக்கழகம் பெற்ற பெருமைகள், பன்னாட்டு கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் செல்லாமல் போய்விடும்.
கடந்த காலங்களில் மாணவ,மாணவியர் பெற்ற சான்றிதழ்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். எனவே, ஒருமைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா இணைப்பு பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்ட வேண்டும். அதற்கேற்ற வகையில் புதிய சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.