சமவெளிப் பகுதியில் இருந்து வெகு தூரத்தில் நகர்கிறது அவர்களது வாழ்க்கை. செல்பேசிகளின் சிணுங்கல்கள் அங்கு இல்லை. மின் இணைப்பு கிடைத்ததே 5 ஆண்டுகளுக்கு முன்புதான். பேச்சிப்பாறை அணையின் மேல் 30 நிமிடங்கள் படகில் பயணம்.
படகில் இருந்து இறங்கியதும் உயரமான மேடும், பள்ளமுமான மலைத் தொடர்கள். காணிக்காரர் என்னும் பழங்குடி இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். வனப் பகுதிக்குள் விவசாயம் செய்து வாழ்வை நகர்த்துகின்றனர். இவர்களது கலாச்சாரமும், பண்பாடும் ஆச்சர்யமூட்டுபவை.
இயற்கையின் மடியில்
நாகர்கோவிலில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பேச்சிப்பாறை அணை. இங்கிருந்து அணை வழியே படகில் பயணிக்க வேண்டும். தச்சமலை காணி கிராமத்துக்கு ரூ. 10, தோட்டமலை கிராமத்துக்கு ரூ. 25 என காணி மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 300 முதல் 500 வரை கட்டணம்.
படகில் பயணிக்கும் போது சமுத்திரம் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது பேச்சிப் பாறை அணை. சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள். இடையிடையே குட்டித் தீவுகளாக பச்சைப்பசேல் தோட்டங்கள் கண்கொள்ளா காட்சிகளாக விரிகின்றன. பேச்சிப்பாறைக்கும், காணி கிராமங்களுக்கும் இடையே 4 படகுகள் இயங்குகின்றன. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. தினம்தோறும் சமவெளிப் பகுதிக்குச் சென்று, வீடு திரும்புவதே காணி மக்களுக்கு சாதனையாக உள்ளது.
மன்னர் தந்த நிலம்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா, ஆபத்து காலத்தில் காட்டுக்குள் தஞ்சம் புகுந்தார். மன்னரைப் பாதுகாத்து சேவகம் புரிந்தனர் காணி மக்கள்.
இதற்கு பிரதிபலனாக மன்னர் மீண்டும் அரியணை ஏறியதும் இவர்கள் வசித்து வந்த மலைப் பகுதியில் இருந்த இடங்களை, 'கரம் ஒளிவு பண்டார வகை காணி சொத்து' என்ற பெயரில் இவர்களுக்கு செப்பு பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறார். காணி என்றால் நிலம் என பொருள். மன்னர் கொடுத்த காணிக்கு, அதாவது நிலத்துக்கு சொந்தக்காரர்கள் ஆனதால், இவர்கள் காணி மக்கள் என அழைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தச்ச மலை, தோட்டமலை, மோதிரமலை உள்ளிட்ட 48 குடியிருப்புகளில் காணி இன மக்கள் வசிக்கின்றனர். இந்த குடியி ருப்புகள் பேச்சிப்பாறை, சுருளகோடு, தடிக்காரங் கோணம் ஊராட்சி பகுதிகளிலும், கடையால், பொன்மனை பேரூராட்சி பகுதிகளிலும் வருகிறது. மாவட்டம் முழுவதும் சேர்த்து 8 ஆயிரம் பேர் உள்ளனர்.
வேடையாடுவதை தங்கள் உரிமையாக கருதும் இம்மக்கள், அதற்கு வனப் பாது காப்பு சட்டம் முட்டுக்கட்டை போடுவதை நினைத்து கவலை தெரிவிக்கின்றனர். காட்டு எலி உள்ளிட்ட சிறு பிராணிகள் இவர்களின் உணவாகின்றன. காணி மக்கள் மரவள்ளி, சேம்பு, சேனை, காய்ச்சில், சிறு கிழங்கு, நூளி, நெடுவன், கவளை, கருவள்ளி கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிரிடு கின்றனர். எல்லா வகை கிழங்குகளையும், பயறு வகைகளையும் சேர்த்து சமைக்கப்படும் 'கொத்து கஞ்சி' இவர்களின் விருப்ப உணவு.
விவசாயமே பிரதானம்
இவர்கள் குடியிருப்பை ஒட்டி ஒவ்வொருவருக்கும் 50 சென்ட் முதல் 10 ஏக்கர் வரை விவசாய நிலம் உள்ளது. ரப்பர் பிரதான சாகுபடி. தென்னை, வாழை சாகுபடியும் நடக்கின்றது. ரப்பர் பாலை ஷீட்களாக தயாரித்து விற்கின்றனர். விவசாய வேலைகளை அனைவரும் ஒன்று கூடி செய்கின்றனர். இதற்கு மாற்று வேலை என்று பெயர். சம்பளம் வாங்குவதில்லை.
மூட்டு காணிதான் அந்த குடியிருப்பின் தலைவர். இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் விளி காணி பூஜை, மந்திரம்போடுதல் பணிகளை செய்கிறார். இவர்கள் தமிழும், மலையாளமும் கலந்த மொழி நடையில் பேசுகின்றனர். 100 வயதைக் கடந்த காளிப் பாட்டி, `கிழங்கும், காந்தாரி மிளகு துவையலும் தான் தின்போம். இந்த வயசுலயும் நோய் ஒன்னும் கிடையாது' என்கிறார்.
வேட்பாளர்களா.. அப்படீன்னா?
காணி குடியிருப்புகளில் இருப்பவர்கள் வாக்களிக்க பேச்சிப்பாறைக்கு படகில் வருகின்றனர். தேர்தலின்போது, வாக்கு கேட்டு எவரும் இங்கு வருவதில்லை. காரணம் இரண்டு குடியிருப்புகளுக்குச் சென்று வந்தால் ஒரு நாள் காலி. வாக்கு கேட்டே வராதவர்கள், இவர்களின் வேண்டுகோளை மட்டும் சட்டை செய்வார்களா என்ன?
காணி இன பெண்கள் அழகியலில் கவனம் செலுத்துவதில்லை. அனைவருமே உழைத்தே வாழ்கின்றனர். காணி குடியிருப்புகளில் இந்த தலைமுறையில் தான் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமே ஏற்பட்டுள்ளது. வெறும் 47 குடும்பங்களே உள்ள தோட்டமலையில் நடிகர் அஜித்தின் `என்னை அறிந்தால்' வெற்றி பெற வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பதாகை கண்ணில்பட்டது. அப்பகுதி இளைஞர்களிடம் கேட்டால் 'தல போல வருமா?' என்கிறார்கள்.
விருதுகள் குவித்த ராஜன் காணி
பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவர் பதவி 1996-ம் ஆண்டு பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது ராஜன் காணி வெற்றி பெற்றார். அதன்பிறகு பொதுப் பிரிவுக்கு கைமாறிய பிறகும், ராஜன் காணி 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருதை அப்துல்கலாமிடமும், சிறந்த ஊராட்சி நிர்வாகத்துக்கான விருதை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த ஊராட்சி தலைவர் விருது, தங்கப்பதக்கம் என விருதுகளை குவித்துள்ளார்.
கல்வியில் முன்னேற்றம்
காணி இன குழந்தைகள் இப்போது கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தச்சமலை, தோட்டமலை, மோதிரமலையில் அரசு தொடக்கப்பள்ளி, ஆலம்பாறை, வட்டப்பாறையில் அரசு நடுநிலைப் பள்ளி, கோதையாறு, வாழையத்துவயலில் அரசு உயர்நிலைப் பள்ளி, பேச்சிப்பாறை, பத்துகாணியில் அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.
காணி குடியிருப்புகளில் இருந்து பொறியியல், மருத்துவம், சட்டம், கலை அறிவியல் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் இருக்கின்றனர். தினமும் படகு பயணம். சுரேஷ் சாமியார்காணி என்பவர் முதல் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது மூத்த மகள் இவாஞ்சலின் ரேஷ்மா பல் மருத்துவம், இளைய மகள் நிஷ்மா சட்டம் படிக்கின்றனர். கல்விக்காகவும், பிற தேவைகளுக்காகவும் காணி மக்கள் சமவெளிக்கு வருவது அதிகரித்திருக்கிறது. சமவெளிப் பகுதியில் இருந்து காணி மக்கள் மீதான நெருக்குதலும் அதிகரித்திருக்கிறது. எனினும் தங்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விடாப்பிடியாக தக்க வைக்க முயல்கிறார்கள் காணிகள்.
`அம்பெடுத்து வில்லெடுத்து, அம்பரா துணியும் போட்டு, காட்டிலே சுற்றித் திரியும், அவர்தாங்க காணிக்காரர்' என்னும் கலாச்சார பாடல் தச்சமலை குடியிருப்பு ஒன்றில் இருந்து ஒலிக்கிறது. பேச்சிப்பாறை அணை மீதான பயணம் முடியும் வரை அந்தப்பாடல் ரீங்காரமிட்டது. சமவெளியில் கால் பதித்தோம்.