கோவை பீளமேடு விமான நிலையத்தின் கழிப்பறையில் துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், விமான நிலைய வளாகத்தின் உட்புறத்தில் உள்ள ஒரு கழிப்பறையில், இன்று (25-ம் தேதி) தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கழிப்பறையின் ஒரு பகுதியில் சில துப்பாக்கிக் தோட்டாக்கள் கிடந்தன. அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர், இது தொடர்பாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தார். தொழில் பாதுகாப்புப் படையினர் அங்கு வந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களை ஆய்வு செய்தனர்.
அதில், ஏ.கே. 47 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று, என் 9 எம்.எம். கைத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 5 என 6 தோட்டாக்கள் இருந்ததும் தெரியவந்தது. இதை யார் கழிப்பறையில் கொண்டு வந்து போட்டுச் சென்றனர் எனத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆய்வாளர் பீளமேடு போலீஸில் புகார் அளித்தார். பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.