எஸ்பிபி-யின் இறப்பையொட்டி மதுரையில் அவரது சோகப் பாடல்களைப் பாடி மெல்லிசைப் பாடகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல தமிழ் திரையிசை பின்னணிப் பாடகர் எஸ்பிபி என்ற எஸ்பி. பாலசுப்ரமணியன். சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை சற்று முன்னேறிய நிலையில், மீண்டும் உடல் நலன் பாதித்து, சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணியளவில் காலமானார்.
அவரது மறைவு உலகம் முழுவதும் அவரது ர்சிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ரசிகர்கள் ஆங்காங்கே அவரது உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மாவட்ட மேடை மெல்லிசைப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில், அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதில் பங்கேற்ற மேடைப் பாடகர்கள் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது சோகப் பாடல்களைப் பாடினர்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் கிராமிய இசைப்பாடகர் மதிச்சியம் பாலா தலைமையில் அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
எல்லீஸ்நகர் உள்ளிட்ட பல இடங்களில் அவருக்கு இசை பிரியர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக வலைதளங்களிலும் அவரது பாடல்களை நேசிக்கும் இசை ஆர்வலர்கள் இரங்கல் செய்திகளை பகிர்ந்தனர்.