எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய “அடிமைப்பெண்” என்ற திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” என்ற பாடலின் மூலம் திரையுலகில் பாடுவதற்கு வாய்ப்பை பெற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழின் உச்சிக்கு சென்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் தாண்டி இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.
பின்னணி பாடலில் கொடிகட்டி பறந்த மக்களால் எஸ்.பி.பி. என அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் எஸ்.பி.பி. குணமடைந்து வரவேண்டும் என்று தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினர்.
திரையுலகை சேர்ந்தவர்கள் பல்வேறு பிரார்த்தனைகள் எல்லாம் செய்தனர். சமீபத்தில் அவர் குணமடைந்து வருகிறார் என்ற செய்தி ஆறுதலாக இருந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு காலமாகிவிட்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழ் திரையுலகத்திற்கு ஒரு பேரிழப்பாகும். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.