தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்
இந்திய இசைக்கலைஞர், மூத்த பின்னணி பாடகர், இசையமைப்பாளர், படத்தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட எஸ்.பி.பி. மறைவு என்னை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.
தன் வாழ்நாள் முழுவதையும் இசையிலும் பின்னணி பாடுவதிலும் கழித்தவர். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை படைத்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் பின்னணி பாடகராக 6 தேசிய விருதுகள், பல மாநில விருதுகளை பெற்றுள்ளார்.
அவருடைய இறப்பு, இந்திய மக்கள், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய முடியாததாகும். தன் மெல்லிசை குரலால் எஸ்.பி.பி. நம்முடனேயே இருப்பார்.
எஸ்.பி.பி.யின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்.
விஜயகாந்த், தலைவர், தேமுதிக
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார் என்ற செய்தி என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. பன்முகத் திறமை கொண்ட அவர், 6 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
திரையுலகில் எம்ஜிஆர் - சிவாஜி படங்களிலும், நான் நடித்த படங்களில் மிகச்சிறப்பாக பாடிய படங்கள் சின்னகவுண்டர், செந்தூரப்பாண்டி, அம்மன் கோயில் கிழக்காலே, போன்ற படங்களிலும், ரஜினி - கமல் மற்றும் அஜித், விஜய் – சூர்யா என தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்காகவும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
தனது இனிய குரலால் அனைத்து தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறையினர் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தான் சார்ந்த திரையுலகினர் என அனைத்து தரப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பாடகர் எஸ்.பி.பி மீளவில்லை.மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல; மொழி, இனம், மதம், தேசம் கடந்த யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இரா.முத்தரசன், மாநில செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இசை உலகில் புகழ் கொடி நாட்டிய எஸ்.பி.பி 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர். பல்வேறு விருதுகளைப் பெற்று அவற்றுக்கு பெருமை சேர்த்தவர். இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர், பின் குரல் பதிவாளர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறன் படைத்த இணையற்ற கலைஞர். சின்னத்திரையில் இளைய தலைமுறையினர் பாடல் பயிற்சிக்கு நுட்ப பயிற்சிகளை எளிய முறையில் கற்றுக்கொடுத்து வந்த அற்புத ஆசிரியர்.
இவரது மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அமர காவியப் பாடல்களிலும், இசையிலும் அவர் என்றென்றும் காலத்தை வென்று வாழ்ந்து வருவார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அஞ்சலி செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்
தெலுங்கு மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் பிரபலமடைந்த எஸ்.பி.பி-யை, மண்ணுலகில் பாடியது போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.