மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலைப் பாதையை சீரமைக்க வேண்டும் என வனத் துறையினருக்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயம் அமைந்துள்ளது. இச்சரணாலயத்துக்கு உட்பட்ட சாப்டூர் ஒதுக்குக் காடு பகுதியில் இந்து சமய அறநிலையத்துக்குச் சொந்தமான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து 5.5 கி.மீ. தொலைவில் இக்கோயில்கள் அமைந்துள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் இக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆடி அமாவாசையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இங்குள்ள வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களை ஒட்டி 3 தினங்களுக்கு மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களால் வனப்பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் ரூ.8.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2017-ல் தாணிப்பாறை முதல் கோயில் வரையில் கான்கிரீட் தளம், படிகள் அமைத்து கிரானைட் கல் பதிக்கப்பட்டது. அதில் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.78.03 லட்சம் செலவில் தாணிப்பாறை அடிவாரம் முதல் 1,723 மீட்டர் வரை நடைபாதை பணி மேம்படுத்தப்பட்டது.
தற்போது நடைபாதையில் பல்வேறு இடங்களில் பள்ளம், மண் சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. காட்டு மரங்களும் பாதையின் குறுக்கே விழுந்து கிடக்கின்றன. இதனால் வயதானவர்கள், மாற்றுத் திறன் பக்தர்கள் அப்பாதையைக் கடந்து செல்வது சிரமமாக உள்ளது.
கோரக்கர் குகை அருகே மண் சரிவு காரணமாக பாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. எனவே, சதுரகிரி மலைக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இ.மணிகண்டன்