உத்தமபாளையம் அரசுப் பள்ளியில் புத்தகங்களைப்போல வரையப்பட்டுள்ள ஒவியங்கள்.  
தமிழகம்

ஓவியங்களால் மிளிரும் அரசுப் பள்ளிகள்

செய்திப்பிரிவு

இரா.கார்த்திகேயன் /த.சத்தியசீலன்

தமிழகத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் ஓவியங்களை வரைந்து வண்ணமயமாக்குகின்றனர் ‘பட்டாம் பூச்சிகள்’ குழுவினர். பட்டாம்பூச்சிகள் இயக்கத்தை தொடங்கிய தேனி மாவட்டம் கூடலூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜசேகரன் கூறும்போது, "கடந்த 6 ஆண்டுகளில் 121 பள்ளிகளின் சுவர்களில் ஓவியங் களை வரைந்துள்ளோம்" என்றார்.

அமைப்பின் துணை ஒருங்கிணைப் பாளரும், திருப்பூர் ஆசிரியருமான ஏ.சந்தோஷ்குமார் கூறும்போது, "பொது வாக விடுமுறை நாட்களில் பள்ளிக்கு குழுவாகச் சென்று சுண்ணாம்பு அடித்து, ஓவியங்களை வரைவோம். ஊரடங்கு காலத்தில் மட்டும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம், நீலகிரி, கடலூர், சேலம், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 25 பள்ளிகளில் ஓவியங்களை வரைந்துள்ளோம். சில பள்ளிகளில் இதற்கான நிதியை ஆசிரியர்களே தருவார்கள். இல்லையெனில், எங்கள் குழுவில் உள்ளவர்கள் செலவை ஏற்றுக் கொள்வார்கள். மலைவாழ் மக்கள் படிக்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகள், மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து, ஓவியங்களை வரைகிறோம்.

ஆங்கில எழுத்துகள், அறிவியல் உபகரணங்கள் என பலவற்றையும் வரைகிறோம்” என்றார். குழு உறுப்பினரும், பள்ளி ஆசிரியரு மான அரவிந்தராஜா கூறும்போது, "ஈராசிரியர் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளின் சூழலை மாற்றினால், மாணவர்களின் மனநிலை மாறும். எனவேதான், பள்ளிகளை அழகாக்கி வருகிறோம். தங்களது பள்ளியிலும் ஓவியங்களை வரைய வேண்டுமெனக் கோரி 600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி கள் விண்ணப்பித்திருப்பதே எங்களது பணிக்கு கிடைத்த அங்கீகாரம்" என்றார்.

கோவை மாவட்டம் தூமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளைக் கவரும் கார்ட்டூன்கள், பறவைகள், விலங்குகள், மரங்கள், பூச்செடிகள், இசைக் கருவிகள், மனித உடலமைப்பு, ஆங்கில எழுத்துகள் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சிகள் அமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, "நாங்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறோம். மாணவர் களின் மனதில் பதியும் வகையில், அனைத்து பாடங்களின் அடிப்படைக் குறிப்புகளையும் வரைந்து வருகிறோம்" என்றனர்.

SCROLL FOR NEXT