பேரிடர் அபாயங்களில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்த ஒத்திகை பயிற்சி காஞ்சி, செங்கை பகுதிகளில் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து இந்த ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர்.
பெருமழை பெய்து வெள்ளம் மற்றும் பேரிடர் அபாயங்களில் பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொன்னேரிக்கரை ஏரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஒத்திகையின்போது மழை, வெள்ளம் போன்ற அவசர காலங்களில் வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்பது, உயிர்காக்கும் கருவிகள், படகுகளைக் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது, முதலுதவி அளிப்பதுஉள்ளிட்டவை செய்து காண்பிக்கப்பட்டன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட தீணைப்புத் துறை அலுவலர் குமார் உட்பட 60-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பங்கேற்றனர்.
கோவளம் கடற்கரையில்..
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் சுனாமிஉள்ளிட்ட பல்வேறு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இதில், வட்டாட்சியர் ரஞ்சனி,வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன், மண்டல வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைஅதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.