தமிழகம்

‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவ் மகன் மர்ம சாவு: பூட்டிய வீட்டில் இருந்து சடலமாக மீட்பு

செய்திப்பிரிவு

பிரபல நடிகர் ‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவ் மகன் பூட்டிய வீட்டில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழகத்தில் 1965-ம் ஆண்டு ‘ஒரு விரல்’ என்ற படம் வெளியானது. இந்த படத்தில் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணாராவ். அதன்பின் இவர் ’ஒரு விரல்’ கிருஷ்ணாராவ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவ் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார். இவரது மகன் சிவாஜிராவ் (45). திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை பழவந்தாங்கல் அவ்வையார் தெருவில் வாடகை வீட்டில் சிவாஜிராவ் வசித்து வந்தார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்துள்ளார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், இவரது வீடு சில நாட்களாக பூட்டியே இருந்துள்ளது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அருகில் வசிப்பவர்கள் நேற்று முன்தினம் மாலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பழவந்தாங்கல் போலீஸார் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கே அழுகிய நிலையில் சிவாஜிராவ் உடல் இருந்தது. இதையடுத்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவாஜிராவ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இறப்புக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT