வத்தலகுண்டு நகைக் கடன் நிறுவனத்தில் நடைபெற்ற 13 கிலோ நகைகள் மற்றும் ரூ.17 லட்சம் கொள்ளைச் சம்பவத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடித்த காட்சிகள், சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் மூலம் இரண்டு பேரைப் பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
வத்தலகுண்டு பிரதான சாலையில் உள்ள மணப்புரம் நகைக்கடன் நிறுவனத்தில் நேற்று முன்தினம் 6 முகமுடிக் கொள்ளையர்கள், ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி, அவர்களைக் கட்டிப்போட்டு பல கோடி நகை, ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் 4 தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர். லாக்கர் அறையில் உள்ள இரண்டு பீரோக்களில் ஒரு பீரோவில் 12 அடுக்கில் இருந்த 900 பாக்கெட் நகைகளை மட்டும் கொள்ளையடித்துள்ளனர். மற்ற நகைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
அடகு வைத்தவர்களின் நகைகளை, ஊழியர்கள் வரிசை எண் படிதான், லாக்கர் அறை பீரோவில் அடுக்கி வைத்திருப்பார்கள். யார், யாருடைய நகைகள் இல்லை என்ற பட்டியலை எடுத்தாலே, கொள்ளைபோன நகை களை உடனடியாக சொல்லிவிட முடியும். ஆனால், நேற்று மாலைக்கு பின்னர்தான் 13 கிலோ நகைகள், ரூ. 17 லட்சம் ரொக்கம் கொள்ளைபோன விவரம் தெரியவந்தது என போலீஸார் கூறினர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முகமூடிக் கொள்ளையர்கள் அலுவ லகத்தில் நுழைந்தபோது முதலில் சி.சி.டி.வி. கேமராக்களை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் விட்டுவிட்டனர். அதனால், கொள்ளைச் சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகம் எதிரே உள்ள கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் விசாரித்தோம். இதில் கொள்ளை நடந்த நேரத்தில் மணப்புரம் நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகத்தின் பக்கத்து கடை முன் அமர்ந்திருந்த மர்ம நபர், அன்று காலை 7 மணி முதல் கொள்ளைச் சம்பவம் முடியும் வரை நோட்டமிட்டுள்ளார்.
இந்த நபர்தான், அலுவலகம் திறந்த நேரம், ஊழியர்கள் எண்ணிக்கை, போலீ ஸார் நடமாட்டத்தை கொள்ளையர்களுக்கு தெரிவித்து வரவழைத்துள்ளதாகத் தெரிகிறது. கொள்ளைச் சம்பவம் முடிந் ததும் அந்த நபரும் தலைமறைவாகி விட்டார். கொள்ளையர்கள், அலுவலகத்தில் நுழைந்ததும் ஊழியர்களுடைய செல்பே சிகளை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். கொள்ளையடித்துவிட்டு திரும்பும்போது அவர்களிடம் செல்பேசிகளை கொடுத்துச் சென்றனர். ஒரு ஊழியரின் செல்பேசி மட்டும் தவறுதலாக, அவர்கள் எடுத்துச் சென்ற நகைப் பையில் சிக்கிக் கொண்டது.
அந்த செல்பேசியின் சிக்னல் நேற்று சோழவந்தானுக்கும், மதுரைக்கும் இடைப்பட்ட இடத்தைக் காட்டியது. கொள்ளையர்கள் அங்கு தலைமறைவாக இருக்கலாம் என்பதால், தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கிறோம் என்றார்.
திட்டமிட்டு நடந்த கொள்ளை
நேற்று முன்தினம் பக்ரீத்தையொட்டி, மணப்புரம் நிறுவனம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு ஏராளமான முஸ்லிம்கள் வருவதும், செல்வதுமாக இருந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் கவனம் முழுவதும் பள்ளிவாசல் மீதே இருந்துள்ளது.
அதனால், அவர்கள் மணப்புரம் நிறுவன வணிக வளாகத்தின் பக்கத்துக் கடையில் அமர்ந்திருந்த மர்ம நபர் மீதும், கத்திமுனையில் கொள்ளையடித்து சர்வ சாதாரணமாக தங்களை கடந்து சென்ற கொள்ளையர் மீதும் சந்தேகம் வரவில்லை.
பக்ரீத் பண்டிகை நாளில், அப்பகுதியில் போலீஸாரின் கவனம் முழுவதும் மசூதி மீதே இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, பலநாட்கள் திட்டமிட்டே முகமுடிக் கொள்ளையர்கள் இந்த கொள் ளையை கச்சிதமாக நடத்தியுள்ளனர்.
அதனால், இவர்கள் தமிழகத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் நடந்த கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.