தமிழகம்

நாகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து இணைய வழியில் கருத்தரங்கம்

கரு.முத்து

கரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நாகப்பட்டினத்தில் இணையவழித் தொழில் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

கரோனாவால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலையிழந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களில் முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கு, நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.

தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் நாகை மாவட்டத் தொழில் முகமை பொது மேலாளர் கமலக்கண்ணன், மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சுமதி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.

தொடர்ந்து நடந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கான தொழில் வாய்ப்புகள், சலுகைகள், வங்கிக் கடன்கள், மானியங்கள் குறித்து விளக்கப்பட்டது. நாகை தொகுதிக்கு அப்பாற்பட்டு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், தொகுதிக்குத் தொடர்புடைய வெளிநாடுகளில் வசிப்போரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கரோனா காலத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மக்களையும், அரசின் திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சி எனவும், இதுபோன்ற தொடர் காணொலிவழித் தொழில் கருத்தரங்கங்களைத் தொடர்ந்து நடத்த உள்ளதாகவும் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறினார்.

SCROLL FOR NEXT