மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் அறிவித்த மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில், இந்தியாவின் கலாச்சாரத் தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
16 பேர் கொண்ட நிபுணர் குழுவில், தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழு குறிப்பிட்ட சிலரைக் கொண்டு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது, குழுவைக் கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்தின் 32 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குழுவை மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த அறிஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
தொன்மைக் கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது தமிழ்ச் சமூக கலாச்சாரமாகும். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற மரபில் வளர்ந்து அறிவியல் தளத்திலும் முத்திரை பதித்துள்ள மூத்த கலாச்சாரத்திற்கு ஆய்வுக் குழுவில் இடமளிக்க மறந்தது அல்லது மறுத்தது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.