கரூர் அருகே தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி அறிவிப்பு இரும்புத் தூணில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த புதுமண தம்பதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வீரமலையைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவர் மனைவி மகாலட்சுமி (20). இவர்களுக்குத் திருமணமாகி 3 மாதங்களாகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் சந்தோஷ் பேக்கரி நடத்தி வந்தார். அலங்காநல்லூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக காரில் நேற்றிரவு (செப். 23) கணவன், மனைவி இருவரும் புறப்பட்டுள்ளனர்.
காரை சந்தோஷ் ஓட்டிவந்துள்ளார். இன்று (செப். 24) அதிகாலை 2 மணிக்கு கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலை வழிகாட்டி அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள இரும்புத் தூணில் கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4 மணிக்கு சந்தோஷும், 4.30 மணிக்கு மகாலட்சுமியும் உயிரிழந்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.