20-ம் நூற்றாண்டுடன் ஒப்பிடும் போது 21-ம் நூற்றாண்டில் ஆயிரம் மடங்கு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்று நேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெயராம் பிள்ளை தெரிவித்தார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த பொத்தேரி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ‘ஆரூஷ்-15’ எனப்படும் தேசிய தொழில்நுட்பம்-மேலாண்மை விழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) முன்னாள் தலைமை இயக்குநரும், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் இதைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். பயிலரங்கம், கருத்தரங்கம், சிறப்பு சொற்பொழிவு என 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன.
இதன் நிறைவு விழா எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், நேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயராம் பிள்ளை பேசியதாவது:
இன்றைய தினம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 20-ம் நூற்றாண்டை விடவும் 21-ம் நூற்றாண்டில் ஆயிரம் மடங்கு புதிய கண்டுபிடிப்புகள் நடந் திருக்கின்றன. முன்பு போல் அல்லாமல் இப்போது தொழில்நுட்பம் எளிமையாகி இருக்கிறது. 79 வயதான எனது தாயாரால் ஸ்மார்ட் போனை எளிதாக பயன்படுத்த முடிகிறது. தொழில்நுட்பத்தால் அனைத்து மக்களையும் சமன்செய்ய முடியும். எல்லோருக்கும் வளர்ச்சியையும் வளமையையும் கொடுக்க இயலும். இப்போதைய பல சமூகப் பிரச்சினைகளுக்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்வு காண இளைஞர்கள் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர் என்.சேதுராமன் தலைமை தாங்கிப் பேசும்போது, “இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். இது மாபெரும் சொத்து. இளைஞர்களின் திறமைகளை சரிவர பயன்படுத்தினால் பிரதமர் அறிவித்துள்ள ‘இந்தியாவில் உருவாக்கும் திட்டம்’ சாத்தியம்தான்" என்றார்.
இந்த விழாவில், பல்கலைக்கழக இயக்குநர்கள் டி.நாராயண ராவ் (ஆராய்ச்சி), சி.முத்தமிழ் செல்வன் (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்) மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், தி இந்து, நேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஹோண்டா, லெனோவா, சிக்சா டாட் காம், வோடாபோன் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்திருந்தன. 4 நாட்கள் நடைபெற்ற ‘ஆரூஷ்-15’ விழாவை முழுக்க முழுக்க மாணவ-மாணவிகளே முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.